நான் கர்த்தர், நான் மாறாதவர்

அவர் அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர். ஞானத்தினால் கொடிமாசிகளை எண்ணுபவர். வானத்தின் நியமங்களை நிர்ணயித்தவர். கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுக்கும் உணவு கொடுப்பவர். நான் கர்த்தர், நான் மாறாதவர்.

365

ராபின் சாம்

நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை (மல்கியா .3:6 ).

காலங்கள் மாறும். மனிதர்கள் மாறுவார்கள். சூழ்நிலைகள் மாறும், ஆனால், கர்த்தர் மாறாதவர்.

காலங்கள் மாறும்

யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான் (ஆதியாகமம்
28 : 10 -11 ).

நேற்றுவரை தகப்பனின் கூடாரத்தில், கானான் தேசத்தில் தங்கின யாக்கோபு, இன்று பெயர்செபாவிலும் அல்ல ஆரானிலும் அல்ல, வழியிலே படுத்து உறங்குகிறான். மரண பயத்தினால் ஓடி வந்தவனுக்கு எதிர்காலம் கேள்விக்குறியானது.

மனிதர்கள் மாறுவார்கள்

அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான். அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்றாள் (யோபு 2 :8 -9 ).

நன்மையிலும், செழிப்பிலும் கூட நின்றவள், இன்று யோபு உயிரோடிருப்பதை விரும்பவில்லை. அவனுடைய உத்தமத்தினால் இனி பயன் இல்லை என்று அவள்
தீர்மானித்துவிட்டாள். தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்றாள்.

சூழ்நிலைகள் மாறும்

தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து, சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான். சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ {என்றான்} (2 சாமுவேல் 16 :5 -7 ).

அப்சலோம் என்னும் தன் குமாரனுடன் கட்டுப்பாடு பண்ணினவர்கள் கூட்டத்தில் அகித்தோப்பேலும் சேர்ந்துவிட்டான் என்று தாவீது கேள்விப்பட்டபோது அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கி விடுவீராக என்று ஜெபித்தான்.

இஸ்ரவேலில் ஒவ்வொருவனுடைய இருதயமும் அபசலோமிடம் திரும்பிவிட்டது என்று தாவீது கேட்டவுடன், தன் வேலைக்காரரிடம்: ‘எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை’ என்றான்.

ஓடிப்போகும், சவுலின் வீடு வம்சத்தானாகிய சீமேயி என்ற மனிதன் தாவீதின்மேல் கற்களை வீசினான், ராஜாவை ஏசினான்.

இது நடக்கும்போது தாவீது ராஜா தான். ஆனால், சூழ்நிலை மாறியதால் அவனுக்கு கனவீனம் வந்தது, வனாந்திர வெளிகளுக்கு ஓடிப்போனான்.

யோபு 29 :4 -5 வசனங்களில் யோபு சொல்கிறான்: ‘தேவனுடைய இரகசியச் செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது. அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.’

யோபு மேலும் சொல்கிறான்: வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்…பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.’

ஆனால், இன்று யோபுவின் நிலைமை மாறிப்போனது.

‘இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்’ (யோபு 30 : 1 ).

சிருஷ்டிக்கப்பட்ட எல்லாமே மாறும்.

‘தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்’ (சங்கீதம் 49 : 11 ).

இருபதாவது வசனம் சொல்கிறது: ‘கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.’

இந்த நிலைமையில்தான் மல்கிய 3 : 6 நமக்கு பெரிதும், பிரகாசமுமான நம்பிக்கையை அளிக்கிறது. அது என்ன?

நான் கர்த்தர் நான் மாறாதவர்.

காலங்கள் மாறும். மனிதர்கள் மாறுவார்கள். சூழ்நிலைகள் மாறும், ஆனால், கர்த்தர் மாறாதவர். அல்லேலூயா!

‘நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம். நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை’ (Psalm 102:25-27).

அவர் சிருஷ்டிகர் என்பதினாலே மாறாதவர்.

விசுவாசத்தின் அவசியத்தைக்குறித்து விசுவாசிகளுக்கு போதிக்க எழுதப்பட்ட நிருபம் யாக்கோபு. அங்கே, சிருஷ்டிக்கப்பட்டவைகளின் நிலையாற்றத் தன்மையை அவன் காண்பிக்கிறான்.

சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான் (James 1:11).

ஆனால், நல்லோர்மேலும் தீயோர்மேலும் சூரியனை உதிக்கப்பண்ணுகிற ஒரு தேவன் உண்டு. அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை (James 1:17).

ரோமாபுரியில் உபத்திரவத்தில் இருந்த யூதர்களுக்கு நம்பிக்கையை வர்த்திக்கச் செய்ய எழுதப்பட்ட நிருபம் எபிரெயர். அந்த நிருபத்தில், விசுவாசிகள் நடத்த வேண்டிய வாழ்க்கை எப்படியிருக்க வேண்டுமென்று நிருபக்காரன் எழுதுகிறான்.

தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் (Hebrews 13:7-8).

அந்த வசனத்தின் பொருள் என்ன?

நேற்றுவரைக்கும் அவர்களை வழுவாமல் காத்தவர் இன்று உங்களையும் அப்படியே காக்கவல்லவர்.

உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார் (1 Thessalonians 5:24).

ஆரம்பமும் முடிவும் இல்லாதவர் மாறாதவர்.

அல்பாவும் ஒமேகாவுமானவர் மாறாதவர்.

முந்தினவரும், பிந்தினவருமானவர் மாறாதவர்.

இதோ மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்றவர் மாறாதவர்.

ஜலத்தின்மேல் அசைவாடினவர் மாறாதவர்.

ஜனங்களின்மேல் தம் ஆவியைப் பொழிந்தருளினவர் மாறாதவர்.

உலகத்தோற்றத்திற்கு முன்னே நம்மைக் கண்டவர் மாறாதவர்.

ஏழு விளக்குகளின் நடுவிலே உலவுகிறவர் மாறாதவர்.

வெண்கலப் பாதங்களையுடைவர் மாறாதவர்.

சமுத்திரத்தை நாசியின் ஸ்வாசத்தால் பிளந்தவர் மாறாதவர்.

வனாந்திரத்தில் மன்னாவைப் பொழிந்தவர், காடையை வரவழைத்தவர் மாறாதவர்.

சிலுவையில் நமக்கு விரோதமானக் கையெழுத்தை குலைத்துப் போட்டவர் மாறாதவர்.

பகையான நடுச்சுவரைத் தகர்த்தெறிந்தவர் மாறாதவர்.

சாத்தானை சீக்கிரமாய் நம் கால்களின்கீழ் நசுக்கப் போகிறவர் மாறாதவர். ஆமென். அல்லேலூயா.

நான் கர்த்தர், நான் மாறாதவர்.

மாறாதவரை நம்பலாம். அவர் கைவிடமாட்டார்.

கர்த்தர் மாறாதவர் என்பதை மூன்று விதங்களிலே வெளிப்படுத்துகிறார்.

1. தேவனுடைய வார்த்தை மாறாதது

கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது (Psalm 119:89).

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது (isaiah 40:8).

அவர் தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்தவர்.

வானங்களை ஜாண் அளவாய்ப் பிரமானித்தவர்.

பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கினவர்.

பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசிலும் நிறுத்துபவர்.

சர்வவல்லமையுள்ள தேவன் அவர். அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் (Psalm 33:9).

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
(Numbers 23:19).

2. தேவனுடைய திட்டம் மாறாதது

கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும் (Psalm 33:11).

ஆசாபு சொல்கிறான்: உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் (Psalm 73:24).

இந்த தேவனின் திட்டம் எப்படிப்பட்டது?

அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் (Isaiah 46:10).

கோரேஸ் ராஜா சிங்காசனத்திற்கு வருவதற்கு 150 வருஷங்களுக்கு முன்னமே ஏசாயா மூலமாகக் கர்த்தரின் ஆலோசனை வெளிப்பட்டது.

அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார் (Genesis 22:2).

இயேசு கிறிஸ்து கொல்கதா என்னும் மலையைச் சிலுவையைச் சுமந்துகொண்டு ஏறுவதற்கு முன்னதாக மோரியா மலையை முன்குறித்தது தேவனின் ஆலோசனை.

அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய் (Genesis 15:13).

ஈசாக்குப் பிறப்பதற்கு முன்னே எகிப்திலிருந்து இஸ்ரவேல் வெளியே வரும் என்று ஆபிராமுக்குச் சொன்னது தேவனுடைய திட்டம்.

3. தேவனுடைய ஞானம் மாறாதது

உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது (Acts 15:18).

Charles Spurgeon once said: There are no furrows on His eternal brow.

தேவனுடைய நெற்றியிலே கவலையின் கோடுகளே கிடையாது.

Nothing surprises this God.

அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு (Job 12:13).

ஏசாயா 28:29 சொல்கிறது: இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது (Isaiah 40:28).

நாம் அவரிடம் கேள்வி கேட்கவோ, அவர் கேள்விக்கு பதில் கொடுக்கவோ ஞானமற்றவர்கள்.

நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்குங் காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை (Isaiah 41:28).

அவர் அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர்.

ஞானத்தினால் கொடிமாசிகளை எண்ணுபவர்.

வானத்தின் நியமங்களை நிர்ணயித்தவர்.

கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுக்கும் உணவு கொடுப்பவர்.

நான் கர்த்தர், நான் மாறாதவர்.

இந்த தேவனின் நாமம் இயேசு கிறிஸ்து. இவரை நீங்கள் நம்பலாம். முக்கால ஞானி அவர். காலத்தைத் தம் கைகளில் ஏந்தியிருப்பவர்.

உன் வாழ்க்கை அவர் கையில் பத்திரமாய் இருக்கும்.

நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன் (2 Timothy 1:12).

இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு (Job 38:3).

அவர் வரும்போது நம் வாழ்வின் கணக்கைக் கொடுக்க ஆயத்தமாய் இருக்கிறோமா? அல்லது குறைவுள்ளவர்களாய் இருக்கிறோமா?

ஆராய்ந்து பாப்போம். ஆயத்தமாவோம்.

இயேசு கிறிஸ்து சீக்கிரமாக வருவார். அவருடைய வருகையில் கைவிடப்பட்டவர்களாகவோ, குறைவுள்ளவர்களாகவோ, இருக்கக் கூடாது.

ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே (Hebrews 10:31).

Your Comments