Pastor K S Wilson enters glory

4280
Pastor K S Wilson

பாஸ்டர் K S வில்சன் மறைவு: அஞ்சலி

ஊழியர் K S வில்சன் அவர்களை நினைவுகூறுகிறேன்

ஊழியர் K S வில்சன் அவர்கள் தன்னுடைய 61 ஆவது வயதில் இன்று (மே 4, 2021) தன்னுடைய ஓட்டத்தை முடித்து மகிமை எய்தினார்.

2013-ஆம் வருடம் ஊழியர் K.S. வில்சன் அவர்களை அவருடைய சென்னை, பெரியார் நகர் வீட்டில் சந்தித்து உரையாடியது இன்றும் என் மனதில் பசுமையான நினைவாக உள்ளது. ஆழுமான ஆவிக்குரிய சத்தியங்களை, அழகான வரிகளில், கவர்ந்திழுக்கும் இசையில் இயற்றுவதில் ஊழியருக்கு இருந்த தேவ அபிஷேகம் அளவிட முடியாதது. தன் பாடல்கள் மூலமாக, ஆயிரம்-பதினாயிரமான ஜனங்களை இயேசுவிடம் கொண்டு வந்த ஊழியர் இப்போது நம்மோடில்லை என்ற வருத்தம் இருந்தாலும் பரம ராஜ்யத்தில் அவரை மறுபடியும் இயேசுவோடு சந்திக்கலாம் என்ற நம்பிக்கை மனதைத் தேற்றுகிறது.

நான் அவரிடம் எடுத்த பேட்டியை வாசியுங்கள். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக. ராபின் சாம்.


“அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரய்யா,
காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது”

என்ற பாடலை தெரியாதவர்கள் தமிழ் கிறிஸ்தவ உலகில் இருக்கவே முடியாது. ஆனால் பிரபலமான இந்த வரிகளையும், மனதின் ஆழத்தில் இறங்கி ஆண்டவர் அன்பை நினைவுகூறி நம்மை ஆற்றித்தேற்றும் பல்லவிகளையும் கொண்ட அற்புதமான இந்தப் பாடலை எழுதியவர் யார் என்று கேட்டால் நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது.

சென்னை பெரியார் நகர் 16-வது தெருவில் வசிக்கும் ஊழியர் K.S. வில்சனிடம் உங்கள் பாடல்கள் பிரபலமானது போல உங்கள் பெயர் பிரபலமாகவில்லையே என்று கேட்டால், பொறுமையாகவும், நிதானமாகவும் வரும் பதில் இது தான்: “இத்தனை வருடங்களாக, நமது சிறு வயது முதல் நாம் பாடின பாடல்களை இயற்றியவர்கள் யார் என்று நமக்குத் தெரியுமா? நாம் அதைக் குறித்தெல்லாம் கவலைப்படாமல் பாடல்கள் கூறின கருத்துக்களை புரிந்து கொண்டு தேவ அன்பை உணர்ந்தல்லவா இவ்வளவு நாளும் இருந்தோம்? இப்போது மட்டும் ஏன் பாடலை இயற்றினவர்கள் பின் போக ஆரம்பித்திருக்கிறோம்? இது நாம் வாழும் காலத்தின் கோலம் என்றே சொல்ல வேண்டும்.”

இதுவரை ஆவிக்குரிய உண்மைகளை உணர்த்தும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி, இசையமைத்து வெளியிட்டுள்ள இந்த ஊழியரை தி கிறிஸ்டியன் மெசெஞ்சர் மாத இதழ்  2013-ஆம்  வருடம்   சந்தித்துப் பேசியது. பேட்டியிலிருந்து முக்கிய பகுதிகளை எமது வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.

பூர்வீகம்: என் தந்தை ஊழியர் K. சம்பந்தம் தமிழ் நாட்டில் போகாத கிராமங்கள் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். இரட்சிக்கப்பட்டது முதல், கிறிஸ்துவுக்காக அவர் வைராக்கியமாக வாழ்ந்து ஊழியம் செய்தார். எங்க அப்பா சேலம் அம்மாப்பேட்டையில் தறிநெய்யும் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். தம்முடைய 17-வது வயதில் இயேசுவை ஏற்றுக் கொண்டதனால் வீட்டாரால் கைவிடப்பட்டு, சென்னைக்கு வந்து, ஒரு கிறிஸ்தவர் குடும்பத்தில், ஒரு கலெக்டர் வீட்டில், தோட்ட வேலைக்காக அமர்த்தப்பட்டு, உண்மையுள்ளவராக காணப்பட்டு, அரசாங்க வேலையில் தேவனால் உயர்த்தப்பட்டார். வேலையோடு கூட ஊழியமும் செய்து வந்த அவர் 2012-ல் தம்முடைய 83-ம் வயதில் ஆண்டவருடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கும்வரை கிறிஸ்துவின் ஊழியராகவே இருந்தார்.

பிறப்பு, வளர்ப்பு: நான் சென்னையில் 1960-ம் வருடம் பிப் 21-ம் தேதி பிறந்தேன். என்னுடைய பிறப்பிலே ஒரு அதிசயம் என்னவென்றால் என் அம்மாவிற்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் நான் பிறந்தவுடன் ‘குழந்தை தாயின் கருவிலிருந்து வெளிவரும்போது மரித்தே பிறந்திருக்கிறது’ என்றார்கள். என் அப்பாவிடம் ‘உங்கள் மனைவி நன்றாக இருக்கிறார்கள், ஆனால் குழந்தை இறந்து விட்டது’ என்று தகவல் சொன்னார்கள். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை என்பதால் என் தகப்பனார் ஒரு ஆலயத்திலே பிரசங்கம் பண்ண வேண்டியிருந்தது. வேதனையை மனதில் அடக்கி விட்டு “நான்  ஞாயிறு ஆராதனை முடித்து விட்டு வந்து பிள்ளையை எடுத்துக்கொள்கிறேன்,” என்று கூறிச் சென்று விட்டார். மருத்துவமனையில் உள்ள செவிலியரில் ஒருவர் என்னை என் தாயிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்லும்போது நான் தும்மினேன். இறந்த குழந்தை எப்படி தும்மும் என்று ஆச்சரியப்பட்ட அவர் என்னை மருத்துவரிடம் காண்பிக்க ஓடிச் சென்றார்கள். என்னை பரிசோதித்த மருத்துவரும் குழந்தைக்கு உயிர் இருக்கிறது என்று உறுதிப்படுத்தினார்கள். அந்த தும்மல் மூலமாகத் தான் கர்த்தர் எனக்கு ஜீவன் கொடுத்தார். இந்த சம்பவம் அன்று எல்லோருக்கும் பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

என் பெற்றோருக்கு நானும், என் தம்பியும் சேர்த்து 2 பிள்ளைகள். என் தம்பி பாஸ்டர் K.S. மார்டின் சென்னை, அண்ணா நகரில் வசிக்கிறார், சென்னையை அடுத்த திருநின்றவூரில் தன்னுடைய சபையில் போதகராக இருக்கிறார். நான் சிறுவயது முதல் ஒரு டாக்டராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஆனால் என்னுடைய ஆசை நிறைவேற வழியில்லை என்று என் ஒன்பதாம் வகுப்பிலே எனக்கு தெரிந்தது. காரணம், கணக்கிலும், அறிவியலிலும் ஆங்கிலத்திலும் முட்டை தான் மதிப்பெண்ணாகக் கிடைத்தது. நான் சிறுவனாக இருக்கும்போது குறும்புக்காரப் பையனாக இருந்தேன். வீட்டில் யாராவது ஊழியக்காரர்கள் அப்பவைப் பார்க்க பைக்கில் வந்தால், அவர்கள் திரும்பிப் போவதற்குள் அவர்கள் வண்டியில் சில வயர்கள் சேதமாகியிருக்கும். பிறர் படும் அவஸ்த்தையைப் பார்த்து ரசிப்பதிலே எனக்கு ஒரு சந்தோஷம்.

அப்பாவின் கண்டிப்பு: நான் பிறந்ததும், சில காலம் வரை வளர்ந்ததும் சென்னையில் மின்ட் ஏரியாவில் தான். ஆனால் இன்றுவரை எனக்கு அங்கே ஒரு நண்பர் கூட கிடையாது. மிகவும் கண்டிப்பாக வளர்க்கப்பட்டேன். நான் செய்த ஒவ்வொரு குறும்புக்கும், சேட்டைக்கும் பலமுறை என் அப்பாவிடம் அடி வாங்கியிருக்கிறேன். அப்போது அப்பா மேல் கோபம் வரும். ஆனாலும் அந்தச் சிறு வயதிலும் ஊழியம் செய்யும் என் அப்பாவிற்கு என்னால் தடையேதும் வந்துவிடக் கூடாது என்ற பாரம் எனக்குள் இருந்தது. சிறுசிறு சேட்டைகளோ, குறும்புகளோ செய்தாலும் அவை அப்பாவுக்குத் தெரியக் கூடாது என்று நினைப்பேன்.

முட்டி, மோதி எப்படியோ பத்தாவது முடித்துவிட்டு தியாகராயாக் கல்லூரியில் PUC வகுப்பிலே சேர்ந்தேன். பத்தாவது வரை தமிழ் மீடியம் வகுப்பிலே படித்த நான் திடீரென்று PUC-யில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்தபோது மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன்.

என் அப்பா படிக்காதவர். அம்மா டீச்சராக வேலை பார்த்தாலும் ஆங்கிலம் பேசத் தெரியாது. என் அப்பாவுக்கு எங்கள் சபைக்கு வரும் மிஷனெரிகளுக்கு நான் மொழிபெயர்ப்பாளராக வர வேண்டும் என்ற அசை வேறு.

PUC படிக்கும்போது என் வாழ்க்கை சற்றே தடம் புரண்டது. நான் இளவயது முதல் இன்றுவரை சினிமா பார்த்தது கிடையது. என் அப்பா மீது இருந்த மதிப்பினால் வாய்ப்புகள் கிடைத்தும் சினிமா பார்த்ததில்லை. தியாகராயாக் கல்லூரியின் எதிரில் உள்ள பஸ் ஸ்டாப்பின் அருகே மகாராணி தியேட்டரின் நிழலில் கூட நான் நின்றதில்லை –   காரணம் அப்பா. நான் அங்கே நிற்பதை யாராவது பார்த்து என் அப்பாவிடம், “சினிமா கொட்டகையின் வாசலில் உங்கள் மகனைப் பார்த்தோமே” என்று சொல்லி விடுவார்களோ என்ற பயம். இதே பயம் என்னை வாலிப வயதிலே வரும் மற்ற கெட்டப் பழக்கங்களில் மாட்டிக் கொள்ளாமல் காத்தது. அன்று சிகரெட்டுக்கும், மதுவுக்கும் நான் அடிமைப்பட்டிருந்தால் என் வாழ்க்கை மிகவும் கஷ்டமானதாக மாறியிருக்கும். கர்த்தர் தான் என்னை காத்துக் கொண்டார்.

வாழ்க்கையில் திருப்புமுனை: PUC படிப்பின் இறுதிப் பரீட்சையில் நான் தோற்றுப் போனேன். என் வாழ்க்கையே இருளாகிப் போனது போல் உணர்ந்தேன். என் சக மாணவர்கள் எல்லாம்  மேற்படிப்பிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது நான் மட்டும் என் வீட்டில், தனிமையில், மனதில் ஓராயிரம் கேள்விகளோடு, கைவிடப்பட்டவனைப் போல அமர்ந்திருந்தேன். அந்தப் பள்ளத்தாக்கின் அனுபவத்தில், ஆண்டவர் என்னோடு பேசினார்: “இப்போது உன் நிலைமை இப்படியிருந்தாலும், நாட்கள் வரும். நான் உன்னை அப்போது பயன்படுத்துவேன்!” இன்று ஆண்டவரின் வார்த்தை என்ன என்பது விளங்குகிறது. ஆனால் அன்று கர்த்தர் என்ன சொல்கிறார் என்றே தெரியவில்லை.

ஆண்டவர் என்னிடம் வீட்டின் அருகேயுள்ள ஒரு குயவன் வீட்டிற்குப் போகச் சொன்னார். அப்போது அது எரேமியா 18:2 வசனம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது நான் குயவன் வீட்டிற்குப் போனேன். அங்கே அவன் மண்ணை எடுத்து திரிகையிலே வைத்து மண்பாண்டங்கள் செய்வதை கவனித்தேன். முதலில் ஒரு அகல் விளக்கைச் செய்தான். திரிகையில் மண்ணை வைக்கும் போதே குயவனுக்குத் தெரியும் என்ன பாத்திரத்தைச் செய்யப் போகிறான் என்று. குயவன் பெரிய ஒரு பானையைச் செய்தபோது ஆண்டவர் மீண்டும் பேசினார்: “பார், நீ தான் அந்தப் பானை. நாட்கள் வரும். நான் உன்னை பயன்படுத்துவேன்.”

கடினமான அந்த வாலிப வயதிலே நான் எப்படி வளர்ந்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை. இன்று போல அன்று வாலிபர்களுக்கு செல் ஃபோன், பைக் போன்ற எந்தவொரு வசதியும் இல்லாத காலம். ஆனால், வறட்சியான அந்தப் பருவத்திலே, 1977-ம் ஆண்டு, என்னுடைய 17-வது வயதில் ஆண்டவரின் வார்த்தை என்னை திடப்படுத்தியது. அதற்குபின் ஆண்டவருக்கு வாழ்க்கையை ஒப்புக்கொடுத்த நான் ஞானஸ்நானமும் எடுத்துக்கொண்டேன். எனக்கு அன்று ஞானஸ்நானம் கொடுத்தது சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பூரண சுவிசேஷ சபையின் போதகரான ஜாண் F. காலேபின் தந்தை பாஸ்டர் K.M. ஜாண் ஐயா. என் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனை அது. ஆனாலும், “ஆயிரக்கணக்கான மக்கள் முன் உன்னை நான் எடுத்துப் பயன்படுத்துவேன்,” என்ற ஆண்டவரின் வார்த்தையை நான் நம்பவில்லை. காரணம் அந்த 17-வது வயதிலே அப்படியொரு காரியம் நடக்க எந்த முகாந்தரமும் இல்லாதிருந்த காலம் அது.

இயல்பாகவே மிகவும் கூச்ச சுபாவம் உள்ள எனக்குச் சரியாக பேசவும் தெரியாது. ஆரோக்கியமுள்ளவனாக இருந்தாலும், பருமனாக இருந்த நான் எப்படி வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும் என்று எனக்கு நானே கேள்வி கேட்டேன். போதாக் குறைக்கு எனக்கு திக்கு வாய் வேறு.

பிறகு PUC பரீட்சையை மீண்டும் எழுதித் தேர்ச்சிப் பெற்றேன். அதற்குப் பிறகு மருத்துவம் படிக்க முயற்சிகள் மேற்கொண்டேன். தனியார் மருத்துவ கல்லூரிகள் எல்லாம் அன்று இல்லை, சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகியவை மட்டுமே சென்னையில் அன்று இருந்தன.

நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தது. நான் ஆயத்தமாகிப் போனேன். கேள்விகள் கேட்டார்கள், நல்ல பதில்களை நானும் கூறினேன். ஆனால், இன்றுவரை காத்திருக்கிறேன். ஒரு பதிலும் வரவில்லை (சிரிக்கிறார்). ஆனால் கர்த்தரின் மேலான கிருபையால் இப்போது ஆவிக்குரிய டாக்டராக இருக்கிறேன் (மீண்டும் சிரிப்பு). உடைக்கப்பட்ட குடும்பங்களை ஆறுதல்படுத்தி ஒன்றாக்கி, சிதைக்கப்பட்ட வாழ்க்கைகளைக் கிறிஸ்துவுக்குள் கட்டியெழுப்பும் காரியங்களைச் செய்யும் நான் ஒரு ஆவிக்குரிய டாக்டர் தானே?

இசையில் ஆர்வம்: பரீட்சையில் தோற்று, நான் வீட்டில்  இருக்கும்போது தான் ஒரு கிடார் வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கிடார் வாங்கினேன். முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று அப்பாவிடம் சொன்னபோது, ‘நீ வாசித்தாலும் சரி, வாசிக்காவிட்டாலும் சரி, வெளியே செல்லக் கூடாது’ என்று தடை விதித்தார். வெளியே போய் வாசிக்க அனுமதி ஒவ்வொரு 2-வது சனிக்கிழமையும் அவர் நடத்தும் சுவிசேஷக் கூட்டங்கள் மட்டும்தான். எனக்கு கிடார் வாசிக்கத் தெரியாவிட்டாலும் ‘டர், புர்’ என்று எதையோ வாசிப்பேன். பல மாதங்கள் இப்படியே சென்றன. இப்படியே, வாசித்து வாசித்து கிடாரை நன்றாக மீட்டக் கற்றுக் கொண்டேன். யாருடைய உதவியும் இல்லாமல் 1983-ல் ஒரு lead  guitarist-ஆக ரிக்கார்டிங்கில் வாசிக்க ஆரம்பித்தேன். இந்துஸ்தான் வேதாகமக் கல்லூரியில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு ரிக்கார்டிங்கில் கிடார் வாசிக்கத் துவங்கினேன். முழுக்க முழுக்க கேள்வி ஞானத்திலேயே வாசித்தேன். ஒரு காலகட்டத்தில், கீபோர்டு, கிடார், மாண்டலின் என்று 3 இசைக் கருவிகளை ஒருமித்து வாசிக்க ஆரம்பித்தேன். அதை பார்க்கவே ஜனம் கூடி வரும். பிறகு, சபையிலே என் அம்மாவுடன் சேர்ந்து பாடவும், இசைக் கருவிகள் வாசிக்கவும் ஆரம்பித்தேன். பேசும்போது வாய் திக்கினாலும், பாடும்போது வார்த்தைகள் பிசிறில்லாமல் வந்தது.

இதற்கிடையே B.Sc (Zoology) முடித்தேன். மீண்டும் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தேன். மீண்டும் நேர்முகத் தேர்வு, மீண்டும் கேள்வி-பதில்கள். இன்றுவரை காத்திருக்கிறேன். மருத்துவப் படிப்பிற்கு அழைப்பு வந்த பாடில்லை. மருத்துவராக முடியாவிட்டாலும் என் பெயருக்கு முன் Dr. என்று title வேண்டும் என்று ஆசை. அதற்கு என்ன செய்வது? M.Sc படித்து, M.Phil முடித்து, Ph.D., படித்து முடித்தால் டாக்டர் பட்டம் பெறலாம் என்ற நோக்கத்தோடு முயற்சிகள் தொடங்கினேன்.

M.Sc படிக்க முயன்றபோது தியாகராயாக் கல்லூரியில் எனக்கு சீட் தர மறுத்தார்கள். என் தந்தையும் அவர்களிடம் பேசிப் பார்த்தும் பலனில்லை. சென்னையில் உள்ள மற்ற கல்லூரிகளில் சேர முயன்றேன். அங்கும் வெற்றியில்லை.

கர்த்தர் அந்த வாசல்களை எனக்கு முன்பாக ஒருவரும் திறக்கக்கூடாதபடிப் பூட்டினார் என்று எனக்கு புரிந்துகொள்வதற்கு நாளாயிற்று.

B.Sc முடித்து ஒரு வருடம் உருண்டோடியது. என்னோடு படித்தவர்கள் எல்லாம் மேற்படிப்புப் படித்துக்கொண்டிருக்கும்போது, நான் மட்டும் வீட்டில், தனிமையில், விரக்தியில் வேதனையைப் போக்க கிடார் வாசித்துக்கொண்டிருந்தேன். இரண்டு வருடங்கள் இப்படி கழிந்தது. இரண்டு வருடங்கள் மூன்றாயின, நான்காயின காத்திருப்பு தொடர்ந்தது. ஐந்து வருடங்கள், வீணாண நாட்கள். ஐந்து ஆறாயிற்று. ஆறு வருடங்கள் ஏழாயின. B.Sc படித்து முடித்து 7 வருடங்கள் கழிந்தன. நான் அப்போதும் என் வீட்டில், தனிமையில், நண்பர்களோ பொழுதுபோக்கோ இல்லாமல் மன வேதனையில் கிடார் வாசித்துக் கொண்டிருந்தேன். தேவ சித்தம் என்ன என்று நான் விளங்கிக் கொள்ளாமல் போன 7 நீண்ட வருடங்கள். வேலையில்லாமல், எந்த ஒரு சம்பாத்தியமும் இல்லாமல் பட்டதாரியான நான் கழித்த 7 ஆண்டுகள். அந்த 7 ஆண்டுகளும் வீட்டில் கண்ணீர் தான்.

ஞாயிறு ஆராதனையில் நான் பாடி அநேகர் அபிஷேகம் பெறுவார்கள், ஆனால் என் வாழ்வில் வெறுமையும், ஏக்கங்களும், பெருமூச்சும் தான் இருந்தது. நம்பிக்கையற்ற நிலை.

அதற்குப் பிறகு ஒரு வேலை கிடைத்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை வேலை செய்ய வேண்டும், அதனால் அதை நிராகரித்தேன். இதே நேரத்தில் ஒரு Insurance கம்பெனியில் வேலூரில் வேலை கிடைத்தது. ஆனால் ஒரே நிபந்தனையை முன்வைத்தார்கள். என் கிறிஸ்தவப் பெயரை மாற்றிக் கொண்டால் வேலை நிச்சயம் என்றார்கள். நான் சென்னைக்கு திரும்பி வந்தேன், அப்பாவிடம் விஷயத்தை சொன்னேன். அப்பா எடுத்த எடுப்பிலேயே ‘அந்த வேலை வேண்டாம்பா’ என்றார். நானும், அப்பாவும் சேர்ந்தே அந்த வேலையின் ஆர்டரை கிழித்து எறிந்தோம்.

அந்த ஏழு ஆண்டுகள் கர்த்தர் என்னை புடமிட்டார் கண்ணீரின் மத்தியில் தான் என்னுடைய முதல் பாடல்கள் சில பிறந்தன. நான் முதன்முதலாக எழுதின பாடல் ‘ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே, எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே’ என்ற பாடல். 1989-ல் இதை எழுதினேன்.

முழுநேர ஊழியம்: கடைசியாக கர்த்தர் எனக்கு 1987-ம் ஆண்டு Railways, Urban Bank-ல் ஒரு வேலையை ஏற்படுத்தித் தந்தார். அந்த 7 வருடங்கள் ஏன் வெறுமையாய் இருந்தது என்று என்னையே நான் கேட்டபோது எனக்குத் தெரிந்தது – அன்றே என் வாழ்க்கையை நான் முழுவதுமாக இயேசுவுக்கு அர்ப்பணித்து முழு நேர ஊழியத்திற்கு சென்றிருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். Urban Bank-ல் 12 வருடங்கள் வேலை செய்தபிறகு தான் நான் ஆண்டவரால் நிரந்தரமாக உணர்த்தப்பட்டு முழு நேர ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்து வந்தேன்.

என் அப்பாவும் வேலை செய்து கொண்டே ஊழியத்தைச் செய்ததால், முழு நேர ஊழியத்தைக் குறித்த சிந்தை எனக்கு வரவேயில்லை. என் அப்பாவும், அம்மாவும் அதைக் குறித்து என்னிடம் பேசினதும் இல்லை. வேலையோடு கூட ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே அன்று குடும்பத்தில் இருந்தது.

1987-ல் நான் வேலையில் சேர்ந்தபோது எனக்கு சம்பளம் 1,200 ரூபாய். 1999-ல் வேலையை விடும்போது எனக்கு சம்பளம் 15,000 ரூபாய். ஆனால் வேலையில் இருக்கும்போது 30 நாட்கள் முடிந்தால் தான் சம்பளம். கர்த்தருடைய வேலையில் இருப்பவர்களுக்கோ தினந்தோறும் சம்பளம். சென்னையில் உள்ள சுமார் 25 போதகர்கள் ஜெபிக்க குயின்ஸ்லேண்டில் மறைந்த ஓவன் ராபர்ட்ஸ் ஐயா தலைமையில் கூடி வந்த இடத்தில் ஆராதனைக்காக அழைக்கப்பட்ட இடத்தில் தான் முழு நேர ஊழிய அழைப்பிற்கு என்னை நான் ஒப்புக்கொடுத்தேன். உடனே வேலையை ராஜினாமா செய்தேன்.

திருமணம்: 1988-ஆம் வருடம், செப்டம்பர் 16-ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள பாஸ்டர் டேனியல் என்பவரின் மகளை நான் கரம் பிடித்தேன். இந்த வருடம் 2013 எங்களுக்கு திருமணமாகி 25 வருடங்கள் நிறைவடைகின்றன.

1989-ம் ஆண்டு நான் முதன்முதலாக பாடிய ‘ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே’ என்ற பாடலும் சரி, அதற்குப் பிறகு இயற்றிய பாடல்களும் சரி நான் எங்கும் எழுதி வைத்துப் பாடுவதில்லை. எல்லாப் பாடல்களும் என் மனதில் தான் உள்ளன. சில பாடல்களை நான் நேரடியாக மேடைகளில் தான் பாடியுள்ளேன். என் பாடல்களை நான் ஒருவரிடமும், வரிகளை சரிபார்க்கவோ அல்லது டியூன் கேட்க வைக்கவோ பாடிக் கேட்பித்தது இல்லை.

பாடல் வரிகளா அல்லது இசையா, எது முதலில் வருகிறது என்று கேட்டால் நான் வரிகள் எல்லாம் வேதத்தில் உள்ளதே என்பேன். சில வசனங்கள் நெஞ்சில் ஆழமாகப் பதியும்போது அதை வைத்து ஒரு பாடல் எழுத வேண்டும் என்று தோன்றும். உடனே வரிகள் பிறக்கும், இசை பிறகு வரும்.

உதாரணத்திற்கு, ‘பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்’ என்ற வரிகள் வேத வசனம் தானே? இந்த வசனத்தில் ஒரு பாடல் எழுத வேண்டும் என்று தீர்மானித்ததும், போகும் போதும், வரும்போதும் அதைக் குறித்தே யோசித்துக் கொண்டிருக்கும்போது பாடல் மெல்லப் பிறக்கும். ஆனால், இந்தப் பாடல் எழுதி முடித்து சுமார் 1 ½ வருடங்கள் காத்திருந்தேன் அதின் டியூனுக்காக. இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றியுள்ளேன். சில பாடல்களை, இந்நாள் வரை வெளியே விடவில்லை. பாடலின் வரிகள் கர்த்தர் தருவதனால் தான் இன்று உலகமெங்கும் அநேக தமிழ் கிறிஸ்தவர்களுக்கு பிரயோஜனமாக உள்ளன. நான் இயற்றிய பாடல்கள் எல்லாமே நான் எனக்காக எழதிக் கொண்டவை. ‘சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பரிசுத்தரே, பரிசுத்தரே’ என்ற பாடலை நான் இயற்றியபோது அது மிகவும் மெதுவாகப் பாட வேண்டிய பாடலாக உள்ளதே என்று நினைத்துக் கொண்டிருக்கையில் ஆண்டவர் அதை ஆராதனைப் பாடலாக மாற்று என்று சொன்னார். அதனால் சேர்க்கப்பட்ட வரிகள் தான் ‘ஆராதனை உமக்கு ஆராதனை.’ இன்று வல்லமையான ஒரு பாடலாக ஆண்டவர் அதை பயன்படுத்தி வருகிறார்.

‘உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்’ என்ற பாடல் சென்னையில் சுவிசேஷகர் ஜவஹர் சாமுவேல் ஐயாவின் கூட்டத்தில் இயற்றப்பட்டது. முதன்முதலாக அவர் மேடையில் தான் அதை பாடினேன். அதே போல ‘சந்தோஷமாய் இருங்கள், எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்’ என்ற பாடலும் ஜவஹர் சாமுவேல் ஐயாவின் கோயம்புத்தூர் கூட்டத்தில் இயற்றப்பட்டது தான்.

ஆசிரியர் குறிப்பு: ஊழியர் வில்சனை பாடலாசிரியராகவும், துதி ஆராதனை நடத்துபவராகவும் மட்டுமே தெரிந்தவர்களுக்கு அவர் 13 வருடங்களாக செய்து வரும் வாலிபர் ஊழியத்தைக் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் இந்த வாலிபர் முகாம்கள் மூலமாக அநேகர் இயேசுவுக்குள் வழிநடத்தப்பட்டு வருகிறார்கள்.

அதைப் போலவே அவர் தந்தை சம்பந்தம் ஐயா விட்டுச் சென்ற கிராம ஊழியத்தை, தற்போது தன் மகள் ரேச்சல் அனிதாவோடு சேர்ந்து சென்னையின் நகர்ப்புறங்களில் இந்த ஊழியர் செய்து வருகிறார்.

இவர்களது ஊழியங்களைக் குறித்து மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்: 0-98401 97383.

Your Comments