பின்மாற்றத்தினால் வரும் ஆக்கினைகள்

ரூத்தின் புத்தகம் நமக்கு பின்மாற்றத்தினால் வரும் விளைவுகளைக் குறித்துச் சொல்கிறது.

3019
Ruth and Naomi

ராபின் சாம்

ரூத்தின் புத்தகம் நமக்கு பின்மாற்றத்தினால் வரும் விளைவுகளைக் குறித்துச் சொல்கிறது. தேவனிடமிருந்து நாம் விலகிப்போவதினால் நமக்கு ஆக்கினைகள் வரும் என்று பார்க்கிறோம்.

பின்மாற்றத்தினால் வரும் சில ஆக்கினைகள்.

நீங்கள் தவறான மாதிரியாய்ப் போவீர்கள்

நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான் (ரூத் 1:1).

நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம் (ரோமர் 14 :7-8).

தேசத்தில் பஞ்சம் வந்தபோது எலிமெலேக்கு தேவனிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனைக் கேட்கவில்லை. இந்த தேசத்தில் என்னையும் என் குடும்பத்தையும் தேவன் பிழைப்பூட்டுவார் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லாமல் போனது.

தேவனுக்கு சித்தமில்லாத உறவுகளில் சிக்கிக் கொள்வீர்கள் 

யூதர்கள் மற்ற தேசத்து மக்களுடனும் சேர்ந்து பெண் எடுக்கவும் பெண் கொடுக்கவும் கூடாது என்று தேவன் அவர்களுக்கு சொல்லியிருந்தார்.

அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளைக் உன் குமாரருக்கும் கொள்ளாமலும் இருப்பாயாக (உபாகமம் 7:3).

ஆனால், ‘இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்’ என்று ரூத் 1:4 -இல் வாசிக்கிறோம்.

புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு இந்தக் கட்டளை உண்டு.

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? (2 கொரிந்தியர் 6: 14).

ஆயுசின் நாட்கள் குறைந்து போகும்

ஏறக்குறைய 10 வருஷங்கள் மோவாபில் அவர்கள் குடியிருந்தார்கள். ஆனால் நஷ்டத்தைத் தவிர வேறு ஒன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு நன்மையும் உண்டாகவில்லை என்பது மட்டும் அல்ல, நகோமி தன் கணவனையும் பிள்ளைகளையும் இழந்தாள்.

நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்…பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள் (ரூத் 1 :3 , 5). 

ஆவிக்குரிய பஞ்சம் வரும்

1 கொரிந்தியர் 15 :19 -இல் பவுல் இப்படிச் சொல்கிறான்: இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.

உயிர் வாழ நகோமி வாக்குத்தத்த தேசத்தை விட்டு மோவாபிற்கு ஓடினாள், தன் குடும்பத்தையும் இழந்தாள், ஆவிக்குரிய நன்மைகளும் இல்லாதவளைப் போனாள்.

நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள் (ரூத் 1 :21).

கர்த்தர் தாமே நம்மை இந்த தேவ செய்தியின் மூலமாக ஆசீர்வதிப்பாராக.

Your Comments