தனது மரணத்திற்குப் பின் சாமுவேல் சவுலை சந்தித்தானா?

ஆனால், எனது அபிமான போதகர் ஒருவரும் தேவன் ஒரு முறை விதிவிலக்கு அளித்தார் என்று போதித்தது என்னை யோசிக்க வைத்தது.

2684

பாபு ஜான்

பல வருடங்களாக எனக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. தனது ஐந்து சகோதரர்கள் மனம் திரும்ப வேண்டும் என்பதற்காக லாசருவை திரும்பவும் உலகத்திற்கு அனுப்பவேண்டும் என்ற ஐசுரியவானின் கோரிக்கையை நிராகரித்த தேவன், எவ்வாறு சாமுவேலின் மரணத்திற்குப் பின்னர் சவுலை சந்திக்க வைத்தார்? அதுவும் ஒரு சூனியக்காரியின் மாந்திரீகத்தில் சாத்தியமா என்றே கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு வேளை ‘கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப் போனான் (1 நாளா 10: 13)’ என்ற வசனத்தின்படி குறிப்பறிந்து (by logic) இறந்த சாமுவேல் சவுலை சந்திக்கவில்லை என்று அறியலாம்.

இன்னொரு வகையில் பரிசுத்த ஆண்டவர் எவ்வாறு தமது பரிசுத்தவானை, அதுவும் ஒரு சூனியக்காரியின் மாந்திரீக சக்தியிலே இவ்வாறு நிகழ சம்மதிப்பார் என்று ஒரு லாஜிக் மூலம் புரிந்து கொள்ளலாம்.

எனினும், சவுலை சந்தித்தது சாமுவேலே… ஆள் மாறாட்டம் செய்த பிசாசு அல்ல என்று வாதிடுபவர்கள் உண்டு.

ஆனால், எனது அபிமான போதகர் ஒருவரும் தேவன் ஒரு முறை விதிவிலக்கு அளித்தார் என்று போதித்தது என்னை யோசிக்க வைத்தது. வேதாகமத்திலிருந்து விடை காண விரும்பி ஆராய்ந்தால், சில கற்றறியும் வேதாகமங்களும் (Study Bible) அவ்வாறே வழி மொழிந்தன.

இந்த கேள்விகள் எழுந்த நேரம் நான் ஒரு ஆராய்ச்சி மாணவனாக ஆங்கில வேதாகமத்தை தான் படித்துத் தியானிப்பேன். தற்செயலாக, எங்களது சபையின் வாலிபர் குழுவில் இந்த கேள்வியை ஆராய்ந்தபோது ஒரு சகோதரர் மூலம் இதற்கான விடையை 1 சாமு 15: 35ல் ‘சவுல் மரணமடையும் நாள் மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை’ என்று வாசித்து அறிந்தேன் (Bower Tamil Translation).

எல்லா ஆங்கில மொழியாக்கங்களும் ‘Until the day Samuel died, he did not go to see Saul again (I Sam 15: 35)  – அதாவது சாமுவேல் மரிக்கும் மட்டும் சாமுவேல் சவுலை சந்திக்கவில்லை – என்றே தெரிவிக்கின்றன.

தூய தமிழ் என்று மார்தட்டிக் கொள்ளும் திருவிவிலியமும் இதே வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. அப்படியானால் சாமுவேல் மரித்தப் பின்னர் சவுலை சந்தித்தான் என்று பொருள் கொள்ளலாம், அல்லவா?

தேவன் எவ்வளவேனும் மாறாதவர் அல்லவா? ஒரு முறை மட்டும் விதிவிலக்கு அளிப்பாரா? இல்லையே!

இதனால்தான், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியாக்கங்களைப் படிப்பது சிறந்தது. ஆயினும் தமிழ் மொழியில் குறைந்த அளவிலே இவ்வசதி இருப்பதால் இதற்கு வாய்ப்பு குறைவு. இப்படியிருக்க, பாரம்பரிய தமிழ் திருச்சபைகளிலே இந்தக் குறிப்பிட்ட திருவிவிலிய மொழியாக்கத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துவது மிகவும் தவறு. அதிலும், ஓய்வு நாள் பள்ளிகளின் வேதாகம போட்டிகளில் திருவிவிலியத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு கூட ஐந்து மார்க்குகள் தரப்படும் என்றஅறிவிப்பு கையூடல் அளிப்பதற்குச் சமானம். எதிர்காலச் சந்ததியைப் பாதிப்பதாகும்.

தேவன் தாமே இந்த சிறுவர்களுக்கு யாரும் தடைக் கற்கள் வைத்திடாதபடி அதுவும் நமது பாரம்பரியத் திருச்சபைப் பெரியோர்களைக் காத்திடுவாராக.

Your Comments