உங்கள் முயற்சிகள் வெற்றியடையும்!

உங்களுக்கு விரோதமாய் பிசாசானவன் கொண்டு வருகிற எல்லாவித பிரச்சினைகளிலிருந்தும் இயேசு உங்களை விடுதலையாக்குவார்.

3046

சாமுவேல் தினகரன்

“நீங்கள் செய்கிற யாவற்றையும் நான் ஆசீர்வதித்து உங்களை வெற்றிச்சிறக்கப்பண்ணுவேன்” என்று ஆண்டவர் வாக்கருளியிருக்கிறார். ஆகவே, நீங்கள் எதைச்செய்தாலும் தைரியமாக செய்யுங்கள், சிறப்புற கல்வி பயிலுங்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதற்கு கீழ்ப்படியுங்கள் அப்பொழுது அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

உங்களுக்கு விரோதமாய் பிசாசானவன் கொண்டு வருகிற எல்லாவித பிரச்சினைகளிலிருந்தும் இயேசு உங்களை விடுதலையாக்குவார். யோசுவாவின் புத்தகத்தில் ஜனங்கள் துதியுடனும் ஆரவாரத்துடனும் எரிகோ கோட்டையை சுற்றி வந்தார்கள். அவர்களுடைய துதியையும் ஆராதனையையும் கேட்ட தேவன், எரிகோ கோட்டையை இடிந்து விழச்செய்து, அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தார் (யோசுவா 6:1-21).

மேலும், யோசேப்பின் வாழ்க்கையை நாம் வாசிக்கும்போது, அவன் தன் சகோதரர்கள் அனைவராலும் வெறுக்கப்பட்டான். யோசேப்பு வெட்கத்தின் பாதை வழியாய் கடந்து சென்றான். தேவனுடைய கண்களில் அவனுக்கு கிருபை கிடைத்தது. அவன் செய்த எல்லாவற்றையும் தேவன் ஆசீர்வதித்து வெற்றியை கொடுத்தார் (ஆதியாகமம் 39:2-3).

ஒருநாள் ராஜாவுக்கு சமானமாக எகிப்து நாட்டிற்கு அதிகாரியாக உயர்த்தப்பட்டான். ஆம், கர்த்தர் உங்களுக்காக யாவற்றையும் செய்து முடிப்பார். அவரை விசுவாசியுங்கள். அவர் நம்மை உயர்த்தும்போது நம்முடைய வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படும். “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (பிரசங்கி 3:11).

அதுபோலவே, உங்களுக்கு விரோதமாக பிசாசானவன் கொண்டுவருகிற எல்லா பிரச்சினைகளையும் ஆண்டவர் அழித்து, நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் உங்களுக்கு வெற்றியைத் தருவார். பரிசுத்த ஆவியானவர் எப்போதும் உங்களோடிருந்து உங்களை வழிநடத்துவார். நீங்கள் அலைந்து திரிவதில்லை. தேவன் உங்கள் வாழ்க்கையில் வைத்திருக்கும் திட்டங்களை நிச்சயமாகவே நிறைவேற்றுவார். எப்படிப்பட்ட சூழ்நிலைக்கு நேராக நீங்கள் கடந்து சென்றாலும், கர்த்தருக்குள் நிலைத்திருந்து, அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியுங்கள். அப்பொழுது, யோசேப்பை ஆசீர்வதித்ததுபோல அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார். தேவன் உங்கள் வாழ்வில் செய்கிற அற்புதங்களுக்கு உண்மையுள்ள சாட்சியாயிருங்கள்.

அன்பின் பரலோகப்பிதாவே,

உம்மையே துதித்து ஆராதிக்கிறேன். பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும். உமக்கு பிரியமான வாழ்க்கை வாழ உதவும். தேவனே, உம்முடைய நோக்கமும் திட்டமும் என் வாழ்வில் நிறைவேற வேண்டுமென்று நான் விசுவாசிக்கிறேன். நான் கையிட்டு செய்கிற பிரயாசங்கள் எல்லாவற்றிலும் எனக்கு வெற்றியை தந்தருளும். என்னையும், என் குடும்பத்தினரையும் ஆசீர்வதியும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

Your Comments