பிரசங்கம் பண்ணும்போது நினைவில் கொள்ள

நீங்கள் பிரசங்கிப்பது பத்து நிமிடங்களே என்றாலும் இயேசுவை காண்பியுங்கள். அவரை மகிமைப்படுத்துங்கள். ஆத்துமாக்கள் ரட்சிக்கப்படும்.

395

ராபின் சாம்

பிரசங்கம் என்பது எல்லோரும் செய்யும் ஒன்று அல்ல. பிரசங்கம் என்பது தேவ அழைப்பின் மூலமாக வருவது. அதற்கு, தேவ வார்த்தையை ஆழமாக தியானிக்க வேண்டும். தேவ அபிஷேகம் நம்மேல் இருக்க வேண்டும்.

பிரசங்கம்பண்ணும்போது நாம் கவனிக்க வேண்டிய சில காரியங்கள் உண்டு. அவைகளில் சிலவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்

அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 2 :1 -இல் இப்படிச் சொல்கிறான்: ‘சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.’

சாதுரிய ஞானமில்லாமல்

தேவன் தன்னை எதற்காகத் தெரிந்துகொண்டார் என்றும் எப்படி தான் பிரசங்கம்பண்ணவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்றும் 1 கொரிந்தியர் 1 :17 -இல் இப்படிச் சொல்கிறான்: ‘ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.’

ஊழியத்தின் முக்கியமான நோக்கம் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதே. அதையும் சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கித்தேன் என்று பவுல் கூறுகிறான்.

மைய வசனம்

சிலர் ஒரு மணி நேரம் பிரசங்கம் செய்தாலும், என்ன பிரசங்கித்தார் என்று ஜனங்களுக்குத் தெரியாது. ஒரு மைய வசனமில்லாமல் பிரசங்கம்பண்ணுவதினால் ஏற்படும் விளைவு இது. ஒரு வசனத்தை வாசித்து, அதன் பின்னணியை சொல்லி, பிறகு பிரசங்கம் பண்ணவேண்டும்.

நேரம் முக்கியம்

உங்களுக்குக்கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பிரசங்கத்தை முடிக்க வேண்டும். உங்களை அழைத்தவர்கள் ஐயோ என்று சொல்லும் அளவிற்கு நேரம் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

தேவன் என்ன சொல்கிறார்

நான் இப்படி நினைக்கிறேன் என்று உங்கள் மனதில் உள்ளதை சொல்வது பிரசங்கம் அல்ல. வேத வாக்யங்களைக் கொடுத்த தேவன் என்ன நினைத்து அதைக் கொடுத்தார், அதை எழுதியவர்கள் என்ன சூழலில் அதை எழுதினார்கள் என்பதே முக்கியம்.

இயேசுவை மகிமைப்படுத்துங்கள்

உங்கள் பிரசங்கத்தில் இயேசுவை ஜனங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் பிரசங்கிப்பது பத்து நிமிடங்களே என்றாலும் இயேசுவை காண்பியுங்கள். அவரை மகிமைப்படுத்துங்கள். ஆத்துமாக்கள் ரட்சிக்கப்படும்.

புரட்டாதீர்கள்

கலப்படம் இல்லாமல் பிரசங்கிக்க வேண்டும். தேவ வசங்களை ஒருபோதும் புரட்டாதீர்கள். வசனத்தின்மேல் வெளிச்சம் வீசும்படி உங்கள் பிரசங்கம் இருக்கட்டும். பக்திவிருத்தி உண்டாக்காத ஊர் கதைகளையும், நய்யாண்டி, நகைச்சுவையையும் கூடுமானவரைத் தவிர்த்து விடுங்கள்.

Your Comments