உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்

நாம் வாழ்கிற காலம் கடைசி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் காலம் என்பதை உணர்ந்து நம் அதிக பாரத்தோடு நமக்காகவும் நம் பிள்ளைகளுக்காகவும் ஜெபிக்க வேண்டும்.

256
Mom and child praying

நம் பிள்ளைகளுக்காக நாம் ஜெபிக்க வேண்டிய 5 மிக முக்கியமான ஜெபக்குறிப்புகள்

கடைசி காலத்தில் வரப்போகிற கொடிய காலத்தை மனதில் வைத்து, இயேசு கிறிஸ்து சிலுவையைச் சுமந்து கொண்டு போகும்போது எருசலேமின் ஸ்த்ரீகளைப் பார்த்து இப்படிச் சொன்னார்: ‘எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்…பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்’ (லூக்கா 23:28-31).

நாம் வாழ்கிற காலம் கடைசி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் காலம் என்பதை உணர்ந்து நம் அதிக பாரத்தோடு நமக்காகவும் நம் பிள்ளைகளுக்காகவும் ஜெபிக்க வேண்டும்.

ஐந்து முக்கியமான விஷயங்களுக்காக நம் பிள்ளைகளை நினைத்து நாம் ஜெபிக்க வேண்டும். அவைகள் என்னவென்று பார்ப்போம்.

1. இரட்சிப்பு

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2 பேதுரு 3:9).

இயேசுவின் அழைப்பை நம் பிள்ளைகள் ஏற்றுக் கொள்ள நாம் ஜெபிக்க வேண்டும். அவர் அவர்களை அழைக்கும்போது, அவரை உதாசீனப்படுத்தாமல் விரைந்து அவர் தரும் இரட்சிப்பை ஏற்றுக் கொள்ள ஜெபிப்போம்.

2. கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல்

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே (மத்தேயு 22: 37-39).

பத்து கற்பனைகளையும் இயேசு இரண்டு கற்பனைகளிலே அடக்கி விட்டார். இந்தக் கற்பனைகளை நம் பிள்ளைகள் ஏற்றுக் கொண்டு அவைகளை நிறைவேற்ற எல்லா முயற்சியும் எடுக்க ஜெபிப்போம்.

3. வேதத்தின்படியுள்ள திருமண வாழ்க்கை

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? ( 2 கொரிந்தியர் 6:14).

நம் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும்போதும், மண வாழ்க்கையில் பிரவேசிக்கும்போதும் இரட்சிக்கப்பட்டவர்களை மணம்முடிக்க ஜெபிக்க வேண்டும். ஒரு நாளும், அவர்கள் இருளின் பிள்ளைகளோடு பிணைக்கப்படாதிருக்க ஊக்கமாக ஜெபிப்போம்.

4. சிந்தையில் பரிசுத்தம்

கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள் (பிலிப்பியர் 4:8).

பரிசுத்தமான வாழ்க்கை வாழ, பரிசுத்தம் நம் எண்ணங்களில் இருக்க வேண்டும். பரிசுத்த தேவனைப் பிரியப்படுத்த கிறிஸ்துவின் வலது பாரிசத்தில் உள்ளதை நாம் நாட வேண்டும். நம் பிள்ளைகளுடைய எண்ணங்களும், சிந்தையும், செயல்பாடும், கிரியைகளும் பரிசுத்தமுள்ளதை இருக்க நம்மை ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம்.

5. தேவனுக்கு முதலிடம்

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (மத்தேயு 6:33). 

நம் பிள்ளைகள் தேவனைத் தேடுகிறவர்களாகவும், தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். கர்த்தருக்குக் கொடுக்கும் காரியத்தில், ஊழியம் செய்யும் காரியத்தில் அவர்கள் அதிக விருப்பம் உள்ளவர்களாக இருக்க நாம் ஜெபம் செய்வோம்.

இந்த ஐந்து காரியங்களில் நம் பிள்ளைகள் கவனம் செலுத்த நாமும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் (நீதிமொழிகள் 22:6). ஆமென்.


Robin Samசகோ ராபின் சாம் ஒரு பிரசங்கியாரும், வேதகாமப் போதகரும், ஊழியரும் ஆவார். The Christian Messengerபத்திரிக்கையின் ஆசிரியரும், Messenger Missionsஸ்தாபனத்தின் கண்காணியும் ஆன அவர் சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

Your Comments